டுவிட்டர் இந்தியா பிரதிநிதிகளுக்கு பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம்

புதுடில்லி :’உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை’ என, ‘டுவிட்டர் இந்தியா’ பிரதிநிதிகளுக்கு, பார்லி., நிலைக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது.

சமூக ஊடகங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதை ஏற்க, ‘டுவிட்டர்’ நிறுவனம் மறுத்ததை அடுத்து, அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பை, மத்திய அரசு விலக்கியது.கொரோனா இரண்டாவது அலை பரவலின் போது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘டூல்கிட்’ வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக டில்லி மற்றும் குர்கானில் உள்ள டுவிட்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற போலீசார், ‘நோட்டீஸ்’ அளித்தனர்.

இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைதளம் தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் குடிமக்கள் உரிமை பாதுகாக்கப்படுவது தொடர்பாக, தகவல் தொழில்நுட்ப துறைக்கான பார்லி., நிலைக்குழு, டுவிட்டர் நிறுவனத்துக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பியது.
இது தொடர்பாக, டுவிட்டர் இந்தியாவின் கொள்கை மேலாளர் சகுப்தா கம்ரான், சட்ட குழுவை சேர்ந்த ஆயுஷி கபூர் ஆகியோர், பார்லி., குழுவின் தலைவர் சசி தரூர் முன், நேரில் ஆஜராயினர்.

அவர்களிடம், நிலைக்குழுவினர் கடுமையான கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு, டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள், ‘எங்கள் நிறுவனத்தின் கொள்கையை நாங்கள் பின்பற்றுகிறோம்’ என பதில் அளித்ததாக கூறப்படுகிறது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பார்லி., குழுவினர், ‘உங்கள் நிறுவனத்தின் கொள்கையை விட, நாட்டின் சட்டங்கள் உயர்வானவை’ என, கண்டிப்புடன் சொன்னதாக
கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசம், காஜியாபாத்தில் ‘முதியவர் ஒருவர் தாக்கப்படும் ‘வீடியோ’வை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து, ஏழு நாட்களுக்குள் நேரில்ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என, டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஸ்வரிக்கு, போலீசார் சம்மன் அனுப்பினர்..
தமிழ் ?மலர்
மின்னிதழ்
செய்தியாளர்தமீம்அன்சாரி