கோவில் நிலங்களை குறைந்த வாடகைக்கு விடக்கூடாது நிலுவை தொகையை வசூலிக்க உத்தரவு

சென்னை :”கோவில் நிலங்களை வைத்து என்ன செய்யலாம் என்பது, அறங்காவலர் அதிகாரத்திற்கு உட்பட்டது; அரசு பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே தர முடியும். கோவில் இடத்தை குறைந்த வாடகைக்கு விடுகிறோம் என சொல்வது, சந்தனக்கட்டை வைத்து கொண்டு அடுப்பு எரிக்கலாம் என்று சொல்வது போன்றது,” என, ஆலயவழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான, 300 ரூபாய் கோடி மதிப்பி லான, 5.52 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அமைச்சரும், கமிஷனரும் தனிக்கவனம் செலுத்தி மீட்டது, மகிழ்ச்சி அளிக்கும் செயல். ‘கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவை மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்படும்’ என, அமைச்சர் கூறியுள்ளார். அதையும் வரவேற்கிறோம்.அதேசமயம், அறநிலையத்துறை அமைச்சர், கமிஷனருக்கு சில விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கோவில் நிதி, விழாக்கள், பூஜைகள் போன்றவை அரசின் அதிகாரத்தின் கீழ் வராது. கோவில் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறும், ஆகம முறைப்படியும், அறங்காவலர்கள் அதிகாரத்தின் கீழ் வருபவை.
அதுபோல, கோவில் நிலங்களை வைத்து, என்ன செய்ய வேண்டும் என்பது, அறங்காவலர் அதிகாரத்தின் கீழ் வரும். இதில், அரசு ஒரு பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே, சட்டப்பூர்வமாக செய்ய முடியும்.கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்பை நீக்க, அறநிலையத்துறை சட்டத்தில், இணை கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதனால், ஆக்கிரமிப்பு குறித்து அறங்காவலர் முறையிட்டால், அவற்றை நீக்க வேண்டியது இணை கமிஷனரின் கடமை. கடந்த, 10 ஆண்டுகளாக தக்கார் முறையிட்டும் செய்ய வில்லை; தற்போது செய்திருக்கிறார்கள்.
கடந்த, 15 ஆண்டுகளாக மீட்கப்பட்ட, கோவில் நிலங்களுக்கான பழைய வாடகை பாக்கியை வசூலிக்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுப்பதே இல்லை. இது, கோவில்களுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை தொடர்ந்து அளித்து வருகிறது.

அறநிலையத்துறை சட்டப்பிரிவு, ’79- -சி’ யில், கலெக்டருக்கு இணையான அதிகாரம் இணை கமிஷனருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, ஜப்தி நடவடிக்கை எடுத்து, வாடகை, குத்தகை தொகையை, இணை கமிஷனர் வட்டியுடன் வசூலிக்க வேண்டும். இதைச் செய்ய தவறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது, அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீட்கப்பட்ட மதிப்புமிக்க இடங்களுக்கு, அந்த இடத்தின் தன்மைக்கேற்ப வாடகை பெறுவது தான் நல்லது. அத்தகைய சிறப்பான வருமானம் வாயிலாக, கோவில்கள், மிக அதிக அளவில் அறச்செயல்கள் செய்யலாம்.கோவில் இடத்தை குறைந்த வாடகைக்கு விடுகிறோம் என்று சொல்வது, சந்தனக்கட்டை வைத்து, ஒரு அடுப்பு எரிக்கலாம் என்று சொல்வது போன்றது. சந்தன கட்டைகளின் உண்மையான விலையை பெற்றால், பலரது வீடுகளில் அடுப்பு எரியும்; அவர்கள் வாழ்வு நலம் பெரும்
மீட்கப்பட்ட நிலங்களை, கோவில் அறங்காவலர்கள், சிறப்பான வருவாய் பெறும் வகையில், வங்கி உத்தரவாதத்துடன் குத்தகை விடலாம் அல்லது ஹிந்து அமைப்புகளுக்கு நியாய வாடகைக்கு கொடுக்கலாம். அங்கே, ஹிந்து பள்ளிக்கூடங்கள், தொழிற்கல்வி நிலையங்கள் அல்லது ஹிந்து மருத்துவமனைகளை நடத்தும்படி, அவர்களிடம் சொல்லலாம். இதனால், கோவிலுக்கும் நியாயமான வாடகை வரும். ஆயிரக்கணக்கான ஹிந்து ஏழைகள், கல்வி, மருத்துவ வசதிகளை குறைந்த செலவில் பெறுவர்.
கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும், அவை மீட்கப்படும் என்று, அமைச்சர் கூறியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. தற்போது, அத்தகைய மிக மதிப்புள்ள, ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பல உள்ளன.அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பரணி தீப கட்டளையின், 500 கிரவுண்ட் நிலம் சென்னை அடையாறிலும்; 175 கிரவுண்ட் நிலம் ராயப்பேட்டையிலும் உள்ளது

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 250 கிரவுண்ட் நிலங்கள் கிரீன்வேஸ் சாலையிலும்; 150 கிரவுண்ட் நிலங்கள் லஸ் சர்ச் சாலை, ராமகிருஷ்ணா சாலையிலும் உள்ளன.காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 141 கிரவுண்ட் நிலம் மீட்கப்படாமல் உள்ளது. கோடம்பாக்கம், பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 350 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த ஒரு கோவிலுக்கு மட்டும், 60 கோடி ரூபாய் வாடகை பாக்கி வரவேண்டியுள்ளது.
இவை அனைத்தும் சிறிய உதாரணங்கள் மட்டுமே. இந்த நிலங்கள் எல்லாம் மீட்கப்பட வேண்டும். வாடகை நிலுவை வசூல் செய்யப்பட வேண்டும். மீட்ட நிலங்களுக்கு உரிய வாடகை பெற்று, கோவில்கள் சிறப்பான அறச்செயல்கள் செய்ய வேண்டும்.தமிழகம் முழுதும், இது போன்று செய்ய, அறநிலையத்துறை அலுவலர்களை முடுக்கி விட, அரசுக்குப் பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.இப்படிச் செய்தால், ஹிந்து மக்களிடம் மிகப்பெரிய நற்பெயரை, இந்த அரசு சம்பாதிக்கும். எந்த மாநில முதல்வரும், இதுவரை பெறாத நற்பெயரை முதல்வர் ஸ்டாலின் பெறுவார்.
சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த சிறப்பான தீர்ப்பு, அரசு கோவில் நிலங்களை மீட்க ஓர் உறுதுணையாக உள்ளது. இந்த தீர்ப்பைப் பின்பற்றி, அரசு செயலாற்றினாலே போதும்; கோவில்கள் மீண்டும் செழிக்கும்.நியாய வாடகை வருமானம் கொண்டு, கோவில் அறங்காவலர்கள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், கோசாலைகள், சிற்பக்கல்லுாரி, ஓவியக் கல்லுாரி, கோசாலையுடன் கூடிய கால்நடை மருத்துவமனைகள் போன்றன அமைக்கலாம்.

இந்த அறச்சாலைகள் வழியாக, கோவில்கள் குறைந்தது, ஒரு இலட்சம் ஹிந்துக்களுக்கு நல்ல சம்பளத்துடன் தமிழகம் எங்கும் வேலை வழங்கலாம்.இதற்கு வழிவகுத்து கொடுத்து, கோவில் அறங்காவலர்களுக்கு சிறப்பாக உதவி செய்தால், அரசுக்கு மிகச் சிறந்த நற்பெயர் கிட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர். தமீம் அன்சாரி