பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று உள்ள நிலையில், பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது?, உயர் கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

மேலும் மாணவர்கள் சேர்க்கையும் ஆரம்பிக்க இருக்கிறது. இது தவிர மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது தொடர்பாகவும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கு வரவேண்டும். அவ்வாறு வரும்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

-செய்தியாளர்
செய்யது அலி