இஸ்ரேல் – ஹமாஸ் போர்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில், ஹமாஸ் படையினர் வசமுள்ள 33 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அடுத்த பணய கைதிகள் விடுவிப்பு வரும் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ராணுவம் மீறி பாலஸ்தீனர்களை கொன்றதாகவும் மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்துவதாகவும் ஹமாஸ் குற்றம்சாட்டியது. மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. ‘மறு அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்தது. இதனால் அடுத்தகட்ட பணயக் கைதிகள் விடுவிப்பு தாமதமாகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போர் நிறுத்தம் ரத்து செய்யப்படும். இது எனது முடிவு. இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது இஸ்ரேல்தான். நான் சொல்வதற்கு உடன்பட வேண்டியது இஸ்ரேல் கையில் உள்ளது. காசா மக்களை எடுத்து கொள்ள ஜோர்டான், எகிப்துக்கு அழுத்தம் தரப்படும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தரும் அமெரிக்க நிதி உதவியை நிறுத்துவேன். காசாவை அமெரிக்கா கைப்பற்றி அதை ரியல் எஸ்டேட் மையமாக்குவேன்” எனத் தெரிவித்தார்.