திருமலைக்கு பக்தர்கள் நடைபாதையாக

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலைக்கு பக்தர்கள் நடைபாதையாக வரும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை இன்று ஒருநாள் மூடப்பட்டது. திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் காணொலி காட்சி மூலமாக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: கனமழை காரணமாக வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு திருமலைக்கு பக்தர்கள் நடந்து வரும் வாரிமெட்டு நடைபாதையை இன்று (17ம் தேதி) ஒருநாள் மட்டும் மூடி வைத்து பக்தர்களை அனுமதிக்க வேண்டாம். கனமழையின் போது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மலைப்பாதை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவு பக்தர்களின் தரிசனம், தங்குமிடம், பிரசாதம் போன்ற அன்றாட செயல்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று வழியை ஏற்பாடு செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். பாபவிநாசம் மற்றும் சீலா தோரணம் வழித்தடங்களை ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள நிலையில் வானிலை நிலவரத்தை பொறுத்து இந்த வழித்தடங்களில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரிமெட்டு மலைப்பாதை இன்று காலை மூடப்பட்டது. இதன் வழியாக நடைபயண பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

₹4.21 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 75,371 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 24,065 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹4.21 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 8 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்