குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள்

குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதாவது; “2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.

எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது”.