நெல்லையில் சிம்லா ஆப்பிள் விற்பனைக்கு
நெல்லையில் சிம்லா ஆப்பிள் விற்பனைக்கு குவிந்துள்ளது. விலையும் சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழங்களில் அதிக சத்து மிக்க பழமாக ஆப்பிள் உள்ளது. கி.மு 6500ம் ஆண்டிலேயே ஆப்பிள் தோன்றியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஆப்பிள்கள் அதிகளவில் விளைகின்றன. கொழுப்பு சத்து, சோடியம் ஆகியவை இதில் கிடையாது.
ரத்த சுத்திகரிப்புக்கும், ரத்த விருத்திக்கும் இதன் பங்கு முக்கியத்துவமாக உள்ளது. தற்போது ஆப்பிள் சீசன் களை கட்டி உள்ளது. வழக்கமாக தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆப்பிள், சீசன் காலங்களில் மட்டும் விலை குறைகிறது. ஆப்பிள் சீசன் காரணமாக சிம்லாவில் இருந்து ஆப்பிள்கள் வரத்து நெல்லைக்கு அதிகரித்துள்ளது. இதனால் நெல்லையில் உள்ள பழக்கடைகள் மட்டுமின்றி, சாலையோர கடைகளிலும் குவித்து போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.300, 250 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வேகமாக சரிந்துள்ளது. கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். அடுத்த சில வாரங்களுக்கு இதே விலை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.