ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ்
ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ் ஒன்றில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஆண்டு கணக்கில் நடந்து வரும் பணியால் வாரத்தின் இறுதி நாள், பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல பல மணி நேரமாகும்.
இந்நிலையில், நேற்று அத்திப்பள்ளி மாநில எல்லை பகுதியிலிருந்து ஓசூர் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் கனரக வாகனங்கள், கார், ஜீப், இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
அதேபோல ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் போலீசார் கடும் சிரமத்திற்கு இடையே ஆம்புலன்சை மீட்டு அனுப்பி வைத்தனர். தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இந்த சாலையில் நடந்து வரும் மேம்பால பணியை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.