பரந்தூரில் விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று திரண்டு 774வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் அளித்தது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக விண்ணப்பத்தை பரிசீலித்து ஆய்வு வரம்புகளை நிர்ணயித்து அனுமதி வழங்கியது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது