வீட்டில் உணவு டெலிவரி செய்ய சென்றவரை தடை செய்யப்பட்ட பிட்புல் வகை நாய்கள் கடித்து குதறியது

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வீட்டில் உணவு டெலிவரி செய்ய சென்றவரை தடை செய்யப்பட்ட பிட்புல் வகை நாய்கள் கடித்து குதறியதால் உதவி கேட்டு அலறியவாறு கார்கள் மீது ஏறி நிற்கும் காணொலி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூரில் மருத்துவர் ஒருவரின் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சல்மான்கான் என்பவர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் அவிழ்த்து விடப்பட்டிருந்த 2 பிட்புல் வகை நாய்கள் அவரை சூழ்ந்து கொண்டு கடிக்க தொடங்கின. நாய்கள் விடாமல் கடித்ததால் வலி பொறுக்க முடியாத சல்மான்கான் உதவி செய்ய கோரி குரலெழுப்பி கூச்சலிட்டும் எவரும் வராததால் வாயில் கேட்டை திறந்து கொண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஏறினார்.

இதை அடுத்து நாய்கள் வீட்டிற்குள் சென்றதும் ரத்தம் வழிய வலியில் துடித்து கொண்டிருந்தவருக்கு சிலர் தண்ணீர் கொடுத்து ஆஸ்சுவாச படுத்தினர். சமூக வலைத்தளங்களில் இந்த காணொலி பரவியதை அடுத்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிட்புல் உள்ளிட்ட 23 நாய் இனங்களை ஒன்றிய அரசு தடை செய்துள்ள நிலையில் நாய்கள் கடித்தபோது உதவிக்கு அழைத்தும் உதவாத மருத்துவருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. சம்மந்தப்பட்ட வீட்டின் நாய்கள் இதுவரை 5 பேரை கடித்துள்ளதாகவும் உரிமையாளர் இல்லாமல் சுதந்தரமாக சுற்றுவதால் அச்சத்துடன் உள்ளதாகவும் அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்