திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி ஆதார் கார்டு மூலம் டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி ஆதார் கார்டு மூலம் டிக்கெட் பெற்ற பக்தர் கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வருபவர்களின் டிக்கெட்டுகளை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்து அனுமதிப்பது வழக்கம். அவ்வாறு சோதனை செய்யும்போது போலி டிக்கெட் அல்லது போலி ஆதார் கார்டை பயன்படுத்தி தரிசன டிக்கெட்டுடன் வருபவர்களை கைது செய்கின்றனர். இதேபோல் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையின்போது தரிசனம் செய்ய வந்தவர்களின் டிக்கெட்டுகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுமதித்தனர்.
அப்போது ஒருவர் போலி ஆதார் கார்டுடன் வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீதர் என்பதும், தேவஸ்தான ஆன்லைன் குலுக்கல் முறையில் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பெற்றதும் தெரிந்தது. இவரது போலி ஆதார் கார்டு மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 400 முறை பதிவு செய்து, 20 முறை குலுக்கலில் சுப்ரபாத சேவை டிக்கெட் பெற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்