சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

காரைக்குடியில் உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆடித்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழாவால் அந்நகரமே கலைக்கட்டியது. பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்பாளும் எழுந்தருளினர்.

தொடர்ந்து அடையாள அட்டை அணிந்த கிராமத்தினர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை, புதிய தேர் செய்தல் போன்ற காரணங்களால் கடந்த 2006ம் ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.