ஜெகன் ஆட்சியில் கொடுமை, மரணங்கள்
ஜெகன் ஆட்சியில் கொடுமை, மரணங்கள்: சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. அதன் தோழமை கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வென்றது.
இதையடுத்து ஜூன் 12ஆம் தேதி (புதன்கிழமை) சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அமராவதியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16 எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “மக்கள் கொடுத்த தீர்ப்பினால், பதவி கிடைத்து விட்டது என யாரும் காற்றில் மிதக்க வேண்டாம்.
“ஜெகன் ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது பல கொடுமைகள் அரங்கேறின. பலர் இதில் உயிரிழந்தனர். அவர்களின் தியாகமே நம்மை இந்த நிலையில் உட்கார வைத்துள்ளது.
“பதவிகள் நிரந்தரம் என யாரும் நினைக்க வேண்டாம். மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்.
“எனது முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்,” என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.