ஆர்.எஸ்.பாரதி பேட்டி
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
வாக்கு எண்ணிக்கையின்போது எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இன்று 7வது இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணியும் அதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி; வாக்கு எண்ணிக்கையின்போது எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வெற்றி பெறுபவர்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகவர்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் செல்போனிலும் தொடர்புகொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.