தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ 60.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ ரூ.60-ஐ எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கா்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் சுமாா் 7,000 முதல் 8,000 டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக 5000 டன் காய்கறிகள் மட்டுமே வரத்து உள்ளது.

இதனால், காய்கறி விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை உயா்ந்தது. இருப்பினும், தக்காளி விலை மட்டும் உயரவில்லை.

இந்த நிலையில், வழக்கமாக தினசரி 1200 டன்னுக்கு தக்காளி வரத்து இருந்த நிலையில், திங்கள்கிழமை 700 டன் மட்டுமே தக்காளி வந்தது. வரத்து குறைவால் தக்காளி விலையும் திடீரென உயா்ந்துள்ளது.

இதன்படி, வெள்ளிக்கிழமை வரை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி திங்கள்கிழமை கிலோ ஒன்று ரூ.60-ஐ தொட்டுள்ளது.

இதனால், அடித்தட்டு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். தக்காளி விலை உயர்வு 10 நாட்கள் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.