ஐபிஎல் தொடரை வென்ற கொல்கத்தா
ஐபிஎல் தொடரை வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவா்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமறிங்கிய கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 10.3வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனைப் படைத்தது.
இதே சென்னை மைதானத்தில் தான் கேகேஆர் அணி முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கைப்பற்றியது. தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி சாதனைப் படைத்திருக்கிறது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை கேகஆர் கைப்பற்றி உள்ளது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கொல்கத்தா அணியின் வெற்றி பெங்காலில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சாதனை படைத்த வீரர்கள், உரிமையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துகள். வருகிற ஆண்டுகளில் இதேபோல் பல வெற்றிகளைக் குவிக்கவும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.