பிரேசிலில் மீண்டும் கொட்டி வரும் பெருமழை
பிரேசிலில் மீண்டும் கொட்டி வரும் பெருமழை.. ரியோ கிராண்டே மாகாணத்தை வெள்ளம் சூழ்ந்ததால் போர்க்கால அடிப்படையில் மீட்பு
பிரேசிலில் மீண்டும் பெருமழை கொட்டி வருவதால் அந்நாட்டின் தெற்கு பகுதி நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரேசிலின் தெற்கு பகுதியில் கடந்த மாதம் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருக்கெடுத்த வெள்ளம் பல்வேறு நகரங்களை மூழ்கடித்து இருந்தது. வெள்ளத்தின் தாக்கத்தில் இருந்து ரியோ கிராண்டே மகாணம் மெல்ல மீண்டு வந்த நிலையில், வியாழன் முதல் மீண்டும் கொட்டி வரும் மழை நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது.
போர்ட்டோ அலெக்ரோ நகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளை 6 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தரைத்தளம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் நுழைந்ததால் மக்கள் மாடிகளிலும், கூரைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை 12மணி நேரத்தில் கொட்டி தீர்த்ததால் நகரத்தின் பல்வேறு பகுதிகள் தனி தீவாகி விட்டன. தாழ்வான பகுதியில் தத்தளித்த மக்கள் கயிறுகள் மற்றும் படகுகள் மூலம் மீட்கப்பட்டு நிவாரணம் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.