ப.சிதம்பரம் கடும் தாக்கு
பிரதமர் மோடியின் பேச்சில் 7 பொய்கள்… உரையில் ‘எருமை’ என கூற மறந்துவிட்டார் :
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். மும்பையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்ட பிரதமர் மோடி,”காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நாட்டையே திவாலாக்கிவிடும்.கோவில்களில் உள்ள தங்கம் மற்றும் பெண்களின் தாலியை பறிப்பதிலேயே காங்கிரஸ் குறிக்கோளாக உள்ளது,’இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கேள்வி – பதில் வடிவில் பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் பேச்சில் எத்தனை பொய்கள் இருக்கின்றன என்ற கேள்வியை கேட்டு 7 என பதில் கொடுத்துள்ளார். அதே போல பிரதமர் தனது உரையில், எதைக்கூற மறந்துவிட்டார் என கேள்வி எழுப்பி, அதற்கு எருமை என பதில் அளித்துள்ளார். மேலும் ஏன் 6 நாட்களுக்கு பின் மீண்டும் பழைய பல்லவியை மோடி பாடுகிறார் என கேள்வி எழுப்பியுள்ள ப சிதம்பரம், மோடியின் உரைகளை எழுதி தருபவர் விடுப்பில் இருப்பதால் மீண்டும் பழைய உரையே அவருக்கு வாசிக்க கொடுக்கப்பட்டது என விமர்சித்தார். அத்துடன் காங்கிரசை நோக்கிய மோடியின் குற்றச்சாட்டுகளில் ஒன்றான பரம்பரை சொத்துகளுக்கான வரி குறித்து தான் எழுதி உள்ள விரிவான கட்டுரையை நாளை 10 இந்திய மொழிகளில் வெளியாகும் செய்தி தாள்களில் படிக்கலாம் எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.