புதுக்கோட்டை விவசாயி ராஜாகண்ணு

மிளகு சாகுபடியில் புதுப்புது யுத்திகளைப் புகுத்தி வெற்றி கண்ட புதுக்கோட்டை விவசாயி ராஜாகண்ணு

மிளகு சாகுபடி செய்தால் நல்ல வருமானம் தான். ஆனால் மிளகு சாகுபடி கேரளா, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் தான் செய்ய முடியும். சமவெளி பகுதி விவசாயிகளால் மிளகு சாத்தியாமா?” இப்படி எந்த விவசாயியாவது கேட்டால் சற்றும் தயங்காமல் “முடியும்” என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தனது பண்ணைக்கு அழைத்துச் சென்று மிளகை பறித்து கையிலும் கொடுக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் அனவயல் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜாகண்ணு அவர்கள். உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பணி ஓய்வுக்குப் பின் தீவிர விவசாயியாக மாறியுள்ள திரு. ராஜாகண்ணு அவரது அனுபவங்களை ஈஷா விவசாயக்குழுவுடன் பகிர்ந்து கொண்டார். “எனக்கு 10 ஏக்கரில் தென்னந்தோப்பு இருக்கிறது. ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்கிறேன்.

என் நண்பர் வடகாடு பால்சாமி என்பவர் மூலமாக தான் மிளகு பயிர் எனக்கு அறிமுகம் ஆனது. சமவெளிப் பகுதிகளில் மிளகை வளர்க்கும் தொழில்நுட்பத்தை கூறி, மிளகுக் கன்றுகள் சிலவற்றையும் அவர் தான் எனக்கு கொடுத்தார். கடந்த 17 வருடமாக மிளகு சாகுபடி செய்கிறேன். ஆரம்பத்தில் ஒரு ஏக்கரில் தொடங்கி தற்போது 3 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறேன்” என்றார். தன்னுடைய நிலத்தில் மரம் சார்ந்த விவசாயத்தின் நடுவே மிளகு வளர்ப்பதை குறித்து பேசிய அவர், “மிளகை தென்னையிலும், தென்னைக்கு இடையே நடப்பட்டுள்ள மற்ற மரங்களிலும் படர விட்டுள்ளேன். மரத்திற்கு மரம் எட்டு அடி இடைவெளி விட்டு போத்துக் கன்றுகளான கிளைரிசிடியா, வாதநாராயணன், கிளுவை போன்ற மரங்களை நட்டிருக்கிறேன். இந்த மரங்களில் மிளகு நன்றாகப் படர்கிறது. முள்முருங்கை திடீரென காய்ந்துவிடும், அகத்தி மரங்கள் காற்றுக்கு சாய்ந்து விடக் கூடியவை, அதனால் இந்த இரண்டு மரங்களையும் தவிர்ப்பது அவசியமாகும். அதுமட்டுமின்றி கிளைரிசிடியா மிகவும் உகந்தாக உள்ளது.