தமிழக மக்கள் தன்னூரிமைக் கட்சி

நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை போன்ற அடிப்படை பொருட்களை தாமதம் இல்லாமல் தடையின்றி வழங்க தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் சார்பில் கோரிக்கை:

வெளிச்சந்தையில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை விட மலிவான விலையில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருட்கள் குறைந்த விலையில் அரசின் மானியத்தின் மூலமாக கூட்டுறவுத்துறை வாயிலாக நியாய விலை கடைகளில் விநியோகம் நடைபெற்று வருகிறது.

ஆனால்,
தற்சமயம் பாமாயில்,
துவரம் பருப்பு, கோதுமை போன்ற பொருட்கள் நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு வழங்குவது காலதாமதமான நிலையில் உள்ளது.

கடுமையான வெப்ப பருவ சூழல் நிலவும் இந்நிலையில் வயதானவர்கள், நோயாளிகள்,
கர்ப்பிணிகள்,
உடலுழைப்பு தொழிலாளர்கள் போன்றோர் வேலைவாய்ப்பு இன்றி பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில்
நியாய விலை கடைகளில் பாமாயில், பருப்பு,கோதுமை,மண்ணெண்ணெய் போன்றவை மாதத்தின் தொடக்கத்தில் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டால்
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் மண்ணெண்ணெய் என்பது தற்போது கானல் நீராக போய்விட்டது.
ஆகினும், அடிப்படை உணவு பொருட்களையாவது நியாய விலை கடைகளில் தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும்,கூட்டுறவு சங்கங்களின் மூலம் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் இணைந்து வெளிமார்க்கெட்டில் குறைந்த விலையில் தரமற்ற பொருட்களை வாங்கி வந்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்வதில் கடையின் விற்பனை ஊழியர்களை பணித்து வருகின்றனர்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை – எளிய அன்றாடங்காய்ச்சி மக்களுக்கு அரசின் நியாய விலைக் கடைகளில் பிரியாணி பேஸ்ட் வாங்கவும் வற்புறுத்தப்படுகிறது.
இது தவிர
மங்கலம் மசாலா, ஜில் சோப், மெட்ரோ சோப்,தரமற்ற ரவை உள்ளிட்ட பொருட்களை வாங்கிட அட்டைதாரர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

கூட்டுறவுத்துறை இயக்குனர் மற்றும் சங்க செயலாளர் போன்றோர் இணைந்து கமிஷன் பெற்றுக் கொண்டு கொள்ளை லாபம் அடித்து தரமற்ற பொருட்களை விற்பனை செய்ய சொல்லி சாதாரண அடிப்படை விற்பனை ஊழியர்கள் மீது திணிக்கும் நிலையும் நிலவி வருகிறது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

நியாய விலை கடைகளில் பொருட்களை வாங்கும் அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் விற்பனை செய்ய கொடுக்கப்பட்ட தரமற்ற தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்யும் நிலையில் பொதுமக்களுக்கும், நியாய விலை கடையின் விற்பனை ஊழியர்களுக்கும் வாக்குவாதமும்,மன வருத்தமும் ஏற்பட்டு வருகிற சூழல் நிலவுவதால் வெளிச்சந்தையில் தரமற்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை கூட்டுறவுத்துறை இயக்குனர்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்.

அரசின் நியாய விலைக் கடைகளில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மாதத்தின் தொடக்க வாரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் சீரான வினியோகம் செய்ய வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், நியாய விலை கடையின் அரிசியை கடத்தி விற்பனை செய்வது என்பது குடிசை தொழிலாகவே பலரால் நடத்தப்படுகிறது.
இதில் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் கள்ள விற்பனை என்பது சாத்தியமாகாது.
ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் நியாய விலை கடையின் அரிசி கடத்தப்பட்டு விற்பனையும் அதற்கு துணை போகும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
நல்வினை செல்வன்,
நிறுவனத் தலைவர்,
தமிழக மக்கள் தன்னூரிமைக் கட்சி.