4 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நேரிட்டது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.
இதில் சொகுசு பேருந்தில் பயணம் செய்த மேல்மருவத்தூரை அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், பிரவீன், சென்னை கொடுங்கையூர் சேர்ந்த தனலட்சுமி மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.