செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும்
செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?
நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழு ஒன்று, எல்லாவற்றையும் விட்டுவிட்டு 45 நாள்கள் செவ்வாய்க் கிரக வீட்டில் வசிக்கப் போகிறார்கள். இவர்களது செவ்வாய் வீடு என்னவோ நாம் வாழும் பூமியில்தான் இருக்கும்.
நாசாவின் மனிதர்களை மாற்று கிரகங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நான்கு தன்னார்வலர்களும் இதில் இணைகிறார்கள். ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில்தான் செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, வாழ்விடம் தயாராகியுள்ளது.
இந்த நால்வர், ஜேசன் லீ, ஸ்டீஃபனி நவரோ, ஷரீஃப் அல் ரொபைதி, பியுமி விஜேசேகரா ஆகியோர் என தெரிய வந்துள்ளது. இவர்களது செவ்வாய் வீட்டில் வசிக்கும் திட்டம் மே 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 24ஆம் தேதி வரை தொடரும்.
இந்த தனிமைப்படுத்துதலை, விஞ்ஞானிகள் எவ்வாறு எதிர்கொள்வர் என்று இந்த திட்டமானது ஆய்வு செய்யவிருக்கிறது. இதுபோலவே, நிலவு, செவ்வாய் மற்றும் பிற கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு, நாசா விண்வெளி ஆய்வு மையமானது மனிதர்களை அதுபோன்றதொரு வாழ்விடத்துக்குள் இருக்கச் செய்து ஆய்வு செய்யும்.
இந்த 45 நாள்களைக் கொண்ட நீண்ட திட்டம், செவ்வாய் வீட்டுக்குள் வாழும் விஞ்ஞானிகளும் செவ்வாய் பரப்பினை பரிசோதனை செய்வது, நடந்து பார்ப்பது போன்ற சோதனைகளை செய்துபார்ப்பார்கள். செவ்வாய் கோளுக்கு அருகே இருக்கும்போது தொடர்பு கொள்ளுதலில் ஏற்படும் 5 நிமிட கால தாமதத்தைக் கூட இந்த விஞ்ஞானிகள் எதிர்கொள்வார்கள்.
பூமியில் இருக்கும் மார்டியன் உலகம் என்றழைக்கப்படும் செவ்வாய் வீட்டுக்குள் நுழையவிருக்கும் இரண்டாவது குழு இதுவாகும். அண்மையில்தான் முதல் குழுவினர் மார்ச் 18ஆம் தேதி தங்களது செவ்வாய் பயணத்தை நிறைவு செய்திருந்தனர். இன்னும் இரண்டு பயண திட்டங்களும் உள்ளன.
இந்த சோதனைக்குச் செல்லும் தன்னார்வலர்களில் ஜேசன் லீ, கன்னெக்டிகட் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்.
இவர் எம்ஐடி உள்ளிட்ட பல முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்.
ஸ்டீஃபனி நவரோ, விண்வெளி செயல்திட்ட அதிகாரி மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
ஷரீஃப் அல் ரொமைதி, அபு தாபியைச் சேர்ந்த விமானி.
விமானத் துறையில் 16 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். விமானியாக பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார்.
பியுமி விஜேசேகரா, நாசாவின் முதுநிலை முனைவர் பட்டம்பெற்ற விஞ்ஞானி. விண்வெளியில் இருக்கும்போது மனித உடலில் ஏற்படும் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.