தர்மபுரி மக்களவை தொகுதி ஒரு பார்வை

பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகளும், பாமக மாநில தலைவர் அன்புமணியின் மனைவியுமான சவுமியா போட்டியிடுவதால் தருமபுரி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். எனவே, இந்த தருமபுரி தொகுதி நட்சத்திர தொகுதியாக அடையாளம் பெற்றுள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்புவரை, தருமபுரி தொகுதியில் திமுக-அதிமுக வேட்பாளர்களுக்கு இடையில் தான் கடும் போட்டி நிலவும் என பேசிவந்த அரசியல் நோக்கர்கள் தங்கள் கருத்துகளை மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். பாமக தலைவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் வேட்பாளர். எனவே, கட்சியின் மொத்த பலமும் தொகுதியில் வெளிப்படும் என்பதால் சூடு குறையாத தேர்தல் களமாக தருமபுரி தொகுதி நிலவும் என பேசத் தொடங்கினர்.

கடந்த சட்டப் பேரவை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தின் 5 தொகுதிகளில் 3-ல் அதிமுக-வும், 2-ல் அன்றைய கூட்டணி கட்சியான பாமக-வும் வெற்றி பெற்றன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலை, (மநீம நீங்கலாக) இன்றுள்ள இதே கூட்டணியுடன் எதிர்கொண்ட திமுக வேட்பாளர் டி.என்.வி.செந்தில்குமார் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 வாக்குகளை பெற்று வென்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

அந்த தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட்டு 53 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 19 ஆயிரம் வாக்குகளையும், மநீம 15 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2014 மக்களவைத் தேர்தலை திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொண்ட நிலையில், பாஜக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதிமுக வேட்பாளர் மோகனை இரண்டாம் இடத்துக்கும், திமுக வேட்பாளர் தாமரைச்செல்வனை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதற்கு முந்தைய 2009 மக்களவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் மருத்துவர் செந்திலை இரண்டாம் இடத்துக்கும், தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனை மூன்றாம் இடத்துக்கும் தள்ளி திமுக வேட்பாளர் தாமரைச் செல்வன் 3 லட்சத்து 65 ஆயிரத்து 812 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தமிழக மக்களவை தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (1 லட்சத்து 35 ஆயிரத்து 942) வென்ற வேட்பாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இவ்வாறு, ஒரே கட்சி தொடர்ந்து வெற்றியை நிலைநாட்டாத தருமபுரி மக்களவைத் தொகுதியில், இன்றைய நிலவரப்படி நிறைய நீர்ப்பாசன திட்டங்கள் கோரிக்கை வடிவிலேயே உள்ளன. சொந்த நிலம் இருந்தும் நீர் வளம் இல்லாததால் வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் வேளாண் சமூகங்களை, சொந்த ஊரில் நிரந்தரமாக குடியமர்த்த இந்தத் திட்டங்கள் பேருதவியாக அமையும்.

அதேபோல, இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான சிப்காட் தொழிற்பேட்டை திட்டமும், முதல் செங்கலை எடுத்து வைத்த நிலையிலேயே தேக்கமடைந்திருக்கிறது. இவைதவிர, வேளாண்மை, சுற்றுலா, கட்டமைப்பு, அடிப்படை வசதி உள்ளிட்டவை தொடர்பான பல கோரிக்கைகளும் காத்திருப்பில் உள்ளன. வாக்காளர்கள் மனம் கவரும் வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 3 பிரதான கட்சி வேட்பாளர்களுமே வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்போது திமுகவில் மணி, அதிமுகவில் அசோகன் நிற்கிறார்கள்.