ஹால் டிக்கெட் வெளியீடு
ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்.டி.ஏ வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேரஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.இதில் முதன்மைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜன.24 முதல் பிப்.1ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் பிப்.12ம் தேதி வெளியாகின.
அதைத்தொடர்ந்து ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்.4 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்.3ல் தொடங்கி மார்ச் 2ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 2ம் கட்ட முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 4, 5, 6, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இவற்றில் ஏப்ரல் 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்காக ஹால் டிக்கெட் மற்றும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 8,9 மற்றும் 12ம் தேதி தேர்வு எழுதவிருக்கும் தேர்வர்களுக்கு பின்னர் வெளியிடப்படும் என என்.டி.ஏ அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் ஆகியவற்றை
jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களை
www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 என்ற தொலைபேசி எண் அல்லது
jeemain@nta.ac.in மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இத்தகவல் என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது