தேர்தல் ஆணையத்தின் விதிப்படி

ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லும் வரம்பில் மாற்றம் வருமா என்பது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இன்று மாலை 5 மணியளவில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 16ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் முகாமிட்டு, பணப்பட்டுவாடா தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஒரு தனிநபர் ஆவணங்கள் எதுவுமின்றி 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பணத்தை தாராளமாக எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் சென்றால் அதற்கு கண்டிப்பாக ஆவணங்கள் தேவை. அப்படி ஆவணங்கள் இல்லை என்றால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கரூவுலத்தில் ஒப்படைத்துவிடுவார்கள். உரிய ஆவணங்களை காண்பித்த பின்னரே அது ஒப்படைக்கப்படும். 10 லட்சத்திற்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுகுறித்த தகவல் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.