ரூ.57.73 லட்சம் பறிமுதல்
மக்களவை தேர்தலை முன்னிட்டு பூந்தமல்லி பகுதியின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு கண்காணிப்பு குழு அலுவலர் முரளி தலைமையில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது பூந்தமல்லி அருகே புதுசத்திரம் பிரதான சாலையில் காருக்குள் உரிய ஆவணங்கள் இன்றி திருத்தணியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கொண்டு வந்த ரூ.57 லட்சம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இப்பணம் தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாலவாக்கத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரை சோதனை செய்ததில், உரிய ஆவணம் இல்லாத ரூ.73,450 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லியில் 2 வெவ்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.57,73,450 ரொக்க பணத்தை நேற்றிரவே பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அப்பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.