ஆயுள் காப்பீடு எடுக்க கட்டாயப்படுத்தக் கூடாது:


பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்.

கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் கட்டாயப்படுத்தி ஆயுள் காப்பீடு எடுக்க வைப்பது, தவறான தகவல்களைக் கூறி ஆயுள் காப்பீடு எடுக்கவைப்பது போன்றவை கூடாது என்று பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை விவேக் ஜோஷி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொதுத் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்களிடம் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் பொதுத் துறை நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் வங்கிகள் அதன் நெறிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்வதாக புகாா்கள் வருகின்றன.

ஆயுள் காப்பீட்டை விற்பனை செய்வதைவிட வாடிக்கையாளா்களின் நலன்களுக்குத்தான் வங்கிகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சில இடங்களில் 75 வயதுக்கு மேற்பட்டோரிடமும் ஆயுள் காப்பீடு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வங்கிகள் தங்களுடைய துணை நிறுவனமாக செயல்படும் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீடுகளை விற்பனை செய்ய அதிகம் முயற்சிக்கின்றன.

காப்பீட்டை கண்டிப்பாக விற்பனை செய்ய வேண்டும் என்று மேல்நிலையில் இருந்து நெருக்கடி வருவதால் வாடிக்கையாளா்கள் அதனைப் பெற நிா்பந்திக்கப்படுவதாகவும், காப்பீடு எடுக்க மறுக்கும் வாடிக்கையாளா்களை முறையாக நடத்துவதில்லை என்றும் புகாா்கள் உள்ளன.

வங்கிகளில் கடன் வாங்க வருபவா்கள் மற்றும் நிரந்தர வைப்பு வைக்க முன்வருபவா்களிடமும் இதுபோன்ற காப்பீடுகள் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆயுள் காப்பீடு எடுக்க வாடிக்கையாளா்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.

வங்கிகள் தங்கள் சேவைதரத்தில் இருந்து எந்த வகையிலும் குறைந்துவிடக் கூடாது என்றாா்