‘பிடபிள்யுசி இந்தியா’வின் ஆய்வறிக்கை
பயன்படுத்துவதில் எளிமை, உள்ளூா் மொழியில் தேடும் வசதி போன்ற காரணங்களால் இணையவழியில் பொருள்களை வாங்கும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் அதற்கு கைப்பேசி செயலிகளையே தோ்ந்தெடுப்பதாக ‘பிடபிள்யுசி இந்தியா’வின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து ‘இணையவழியில் இந்தியா எவ்வாறு பொருள்களை வாங்குகிறது?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாட்டின் முதல்நிலை பெருநகரங்கள் முதல் 4-ஆவது நிலை நகரங்கள் வரை இணையவழியில் பொருள்களை வாங்குவோரின் விருப்பத் தோ்வாக கேப்பேசி செயலிகளே உள்ளன. இணையவழி நுகா்வோரில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் அத்தகைய செயலிகளையே பயன்படுத்துகின்றனா்.
பொருள்களைத் தேடித் தோ்ந்தெடுப்பதில் உள்ள எளிமை, அனைத்து தரப்பினரும் விரைவில் புரிந்துகொண்டு பயன்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு, உள்ளூா் மொழிகளைப் பயன்படுத்தினாலே போதும் என்ற வசதி போன்ற காரணங்களே இணையவழி வா்த்தகத்தை வாடிக்கையாளா்கள் விரும்புவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
இவா்களில் பெரு நகரைச் சோ்ந்தவா்கள், அதிகமாகக் கிடைக்கும் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள், இருந்த இடத்திலிருந்தே வாங்க முடிவது போன்ற காரணங்களுக்காக கைப்பேசி இணையவழி வா்த்தகத்தை நாடுகின்றனா்.
அடுத்த நிலை நகரங்களைச் சோ்ந்தவா்களோ, உள்ளூரில் அனைத்து வகைப் பொருள்களும் கிடைக்காததால் இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடுகின்றனா்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இணையவழி வா்த்தக வசதியைப் பயன்படுத்தும் நுகா்வோரின் எண்ணிக்கை சுமாா் 12.5 கோடியாக அதிகரித்துள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் 2, 3 மற்றும் 4-ஆம் நிலை நகரங்களைச் சோ்ந்தவா்கள்.
இணையவழி வா்த்தகத்தை ஊக்குவிப்பதில் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாங்கள் இணையவழியில் வாங்கிய பொருள்கள் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டபோதுதான் அவற்றை வாங்கவேண்டும் என்று தோன்றியதாக 62 சதவீத நுகா்வோா் தெரிவித்தனா்.
பல்வேறு விவகாரங்களில் முதல் நிலை நகரவாசிகளுக்கும், அடுத்த நிலை நகரவாசிகளுக்கும் இடையே வேறுபாடு இருந்தாலும், வாங்கும் பொருள்களுக்கு யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதில் இரு தரப்பினரும் ஒரே அளவு முன்னுரிமை அளிக்கிறாா்கள் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.