ரஷ்ய அதிபர் தேர்தல்
ரஷ்ய அதிபர் தேர்தல் மார்ச் 15ஆம் தேதி துவங்கியது. இது ஞாயிறு, மார்ச் 17ஆம் தேதி வரை நடக்கும். இதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் ஐந்தாவது முறை ரஷ்ய அதிபராவார்.
யுக்ரேனில் ரஷ்யா இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் போருக்கு மத்தியில் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், மாஸ்கோவில் இருந்து 100கி.மீ. தூரத்தில் இருக்கும் பொரோவ்ஸ்க் நகரில், வரவிருக்கும் தேர்தலுக்கான அறிகுறியே இல்லை. வெகுசில பதாகைகளும் போர்டுகளுமே இருக்கின்றன. ஆனால் யாரும் துண்டுச் சீட்டுகளை விநியொகம் செய்வதைப் பார்க்க முடியவில்லை.