தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை

சிஏஏ-விற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் எழுச்சி ஜனநாயக போராட்டங்கள் தொடரும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததாக ஒரு அறிவிப்பை ஆளும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டு, 2014 க்கு முன்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் அவர்களுள் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படாது என்றும் இச்சட்டம் சொல்கிறது.

மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

துன்புறுத்தல் காரணமாக, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களுக்கும், பூடானில் இருந்து வந்த இந்துக்களுக்கும், ரோஹிங்கியாவில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கும் இந்தச் சட்டத்தில் எந்த வழிகாட்டுதலும் இல்லை.

2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பல திருத்தங்களோடு சட்டமாக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக இதை நடைமுறைப்படுத்தாத மமத்திய அரசு தேர்தல் நேரம் என்பதால் வாக்குகளை இதன் மூலம் அறுவடை செய்ய திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் கோடிக்கணக்கான இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அனைத்து மதத்தினரும் மத வேறுபாடுகளைக் களைந்து போராட்டக் களத்தில் இணைந்ததே இந்தச் சட்டம் இந்தியர்களுக்கு எதிரானது என்பது தெளிவாகப் புரிகிறது.

இச்சட்டம் அமல்படுத்தப்படுத்தப்பட்டால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் அழுத்தமாக வைக்கப்படுகின்றது. ஆனால் இதன் மூலம் மொழிவாரியான சிறுபான்மையினர் மற்றும் நாடோடி இன மக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள். இதைக் கருத்தில் கொண்டு தான் இந்தியாவின் பல மாநிலங்களில் சிஏஏ விற்கு எதிராக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு முஸ்லிம்களை நோவினை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியத் தலைநகரில் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் போராடி வரும் நேரத்தில் அதில் கவனம் செலுத்தாமல் முஸ்லிம்களைக் குறிவைத்து மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது. இந்த எதேச்சதிகார போக்கை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாகக் கண்டிக்கிறது.

மீண்டும், மீண்டும் மக்கள் போராட்டங்களை நடத்தக்கூடிய நிலையை இது ஏற்படுத்தும் என்பதை ஆளும் அரசிற்கு எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறோம்.

மக்கள் விரோத சட்டங்கள் எப்போதும் நிலையாக இருந்ததில்லை. மக்கள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலைதான் ஏற்படும். எந்தக் காலத்திலும் அரசியல் சாசனத்திற்கு எதிரான சட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.