லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி
சென்னை போரூர் அருகே ராமாபுரம், அர்ஜுனன் தெருவை சேர்ந்தவர் பாலு. கார்பென்டர். இவருக்கு மனைவி விஜி, மகள் ராஜேஸ்வரி (20) மற்றும் ராஜேஷ் (18) என்ற மகன் உள்ளனர். இதில் ராஜேஷ், பல்லாவரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரி முடிந்ததும் தனது சக கல்லூரி நண்பரான சாய் (18) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு ராஜேஷ் வீடு திரும்பியுள்ளார். பைக்கை ராஜேஷ் ஓட்டி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில், திருநீர்மலை அருகே பைக்கில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் அடித்து நின்றது. இதனால் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் திடீரென நின்ற லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. பைக்கிலிருந்து கல்லூரி மாணவர்களான ராஜேஷ், சாய் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கல்லூரி மாணவர் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சாயை மீட்டு, குரோம்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.