கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் 6 வயது சிறுவன் தனது வீட்டு வாசவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கையை பிடித்து இழுத்து தூக்க முயன்றதாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகள் சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த ஆசாமியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அந்த நபரை குழந்தையை கடத்த முயன்றதாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; குழந்தை கடத்தல் முயற்சி நடந்ததாக வந்த புகாரை அடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றோம். குழந்தை கடத்தல் புகாரின் உண்மைத் தன்மையை அறிய 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுபோதையில் இருந்த நபர், சிறுவன் ஒருவனை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சிறுவனின் உறவினர் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுபோதையில் சிறுவனை பின்தொடர்ந்து சென்றாரே தவிர, கடத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை. போலீசாரிடம் விளக்கம் பெறாமல் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.