பாகிஸ்தானில் புதிய ஆட்சி

பாகிஸ்தானில் 2024 பொதுத்தேர்தல் நடந்து சுமார் ஒருமாத காலம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை புதிய பிரதமர் பதவியேற்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த இடத்தில் அந்நாட்டு ராணுவத்தின் கணக்கு பொய்யானது தான் ஹைலைட். ஏனெனில் பாகிஸ்தானை பொறுத்தவரை ராணுவத்தின் அதிகாரம் ஆட்சியில் கட்டாயம் இருக்கும். இல்லையெனில் ராணுவமே ஆட்சிக் கட்டிலில் இருக்கும்.

பாகிஸ்தான் அரசியல்

கடந்த 77 ஆண்டுகால ஆட்சியை திரும்பி பார்த்தால் புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சிறிய கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க மும்முரம் காட்டி வருகின்றனர். மறுபுறம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் தங்களுக்கென்று புதிய கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தானின் 16வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டு பிரதமரையும் தேர்வு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவலின் படி பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்பார் என்கின்றனர். இவரை பிரதமர் நாற்காலியில் அமரும் வண்ணம் உடன்பிறந்த சகோதரர் நவாஸ் ஷெரீப் வியூகங்கள் வகுத்துள்ளார்.