பிரதமர் மோடிக்கு பேசிய டி.ஆர். பாலு
தமிழ்நாட்டிற்கு வந்து திமுகவை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் அக்கட்சியின் எம்.பி. டிஆர் பாலு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுமுறைப் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்து, தான் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டு போயிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது பேச்சை பார்க்கும் போது, அவரை நினைத்து பரிதாபப்பட தான் தோன்றுகிறது. பதவி நாற்காலி காலியாகும் வேளையில், தமிழ்நாட்டுக்கு வந்து அவர் முறுக்கி, முறுக்கி பேசி இருக்கிறார்.
தமிழகத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருக்கிறார் திமுக எம்.பி. டி.ஆர். பாலு. மேலும், தமிழகத்துக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் இங்கே வர உங்களுக்கு கூச்சமாக இல்லையா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தனது 10 ஆண்டுகால ஆட்சியை பற்றி சொல்ல எதுவுமே இல்லாததால், திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை மெய்மறந்து புகழ்ந்தும், நெல்லை கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டு சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்த்தவரே ஜெயலலிதா தான். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2 முறை முதல்வர் பதவியை இழந்தவர் ஜெயலலிதா. 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்று சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா, சிறப்பான ஆட்சியை தந்தததாக பிரதமர் பேசியதை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் நிலைமை இந்த அளவுக்கு சென்றுவிட்டதே என்று கிண்டல் செய்கிறார்கள்.