தேர்தல் பத்திரம் முறை ரத்து

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகைசெய்யும் தேர்தல் பத்திரத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என கடந்த 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. 

இந்நிலையில், டிசம்பர் 29, 2023 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 15 வரை, அதாவது உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கும் முன்பு வரை மத்திய அரசு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 8,350 பத்திரங்களை அச்சிட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2018 முதல், மத்திய அரசு ரூ. 35,660 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சிட்டுள்ளது. இதில், தலா ரூ. ஒரு கோடி மதிப்பு கொண்ட 33,000 பத்திரங்களும், தலா ரூ.10 லட்சம் மதிப்பு கொண்ட 26,600 பத்திரங்களும் அடங்கும். 

இந்த தகவலை ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் கே பத்ரா தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை அளித்துள்ளது.

அந்த ஆர்.டி.ஐ பதிலின்படி, கமிஷன் மற்றும் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரசுக்கு ரூ. 13.94 கோடி செலவாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விற்பனைக்கான கமிஷனாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.12.04 கோடியை வசூலித்ததுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 30 கட்டங்களில், நன்கொடையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் எந்தவித கமிஷன் அல்லது ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், “தேர்தல் பத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் அரசியலமைப்பிற்கு எதிரானது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கருப்புப் பண விவகாரத்தைக் கையாள்வதற்கான மத்திய அரசின் நியாயப்படுத்தல் நியாயமானது அல்ல.” என்றும் தெரிவிக்கப்பட்டது.