இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!
அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை கிராமத்தைச் சேர்ந்த
பட்டியல் இனத்தைச் சார்ந்த மு. பாஞ்சாலை (59) என்பவர் அரூர் நகரத்திலிருந்து நவலை கிராமத்தில் அவரது அன்றாட வாழ்விற்காக மாட்டிறைச்சி எடுத்து வந்து வியாபாரம் செய்வது வழக்கம். வழக்கம் போல் மாட்டிறைச்சி வாங்கி கொண்டு அரசு பேருந்தில் சென்றுள்ளார்.அப்போது பேருந்து நடத்துநர் ரகு என்பவர், அந்த மூதாட்டியை பேருந்திலிருந்து கீழே இறங்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அரூர் மோப்பிரிப்பட்டி காட்டுப்பகுதியில் பேருந்தை நிறுத்தி விட்டு அந்த மூதாட்டியை இறக்கி விட்டுள்ளார். இந்நிலையில், வயதான அந்த மூதாட்டி பேருந்து நடத்துநரிடம், இன்று ஒரு நாள் மட்டும் என்னை விட்டு விடுங்கள் இனி நான் கொண்டு வரமாட்டேன் என்றும் தயவு செய்து என்னை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கூட இறக்கி விடுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதை பொறுப்படுத்தாமல் நடத்துநர் அந்த மூதாட்டியை சுடும் வெயிலில் சாலையிலேயே இறக்கி விட்டுள்ளார். மேலும், இரக்கமின்றி நடந்து கொண்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.