எக்ஸ்பிரஸ் கவிஞர் #தஞ்சை_ராமையாதாஸ்

மாரியம்மன் என்ற திரைப்படத்தில் கவிஞராக அறிமுகமான ராமையாதாஸ், 250 படங்களுக்கு மேல் சுமார் இரண்டாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். புலவர் பட்டம் பெற்று அங்குள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ராமையாதாஸ் சுதந்திரப் போராட்ட பாடல்களும் எழுதியுள்ளார். சுதந்திரம் கிடைத்த பின்னர் தனக்கு வழங்கப்பட்ட தியாகி என்ற பட்டம், பட்டயம் ஆகியவற்றை வேண்டாம் என மறுத்தவர் தஞ்சை ராமையாதாஸ்.

ஆசிரியராக இருக்கும்போதே நாடகத்துறையில் ஆர்வம் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து வாத்தியார் ஆனார். சென்னை வந்த அவருக்கு ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் டி.ஆர். மகாலிங்கம் மச்சரேகை என்ற படத்தை தயாரிக்க எண்ணியபோது அவருக்கு உதவியாக சென்னை வந்தார்.

நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

எம்ஜிஆர் நடித்த குலேபகாவலி திரைப்படத்தில் சொக்கா போட்ட நவாபு என்ற பாடலும் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்ற பாடலும் தஞ்சை ராமையாதாசை அடையாளம் காட்டியது.

ராமையாதாசின் பாடல் எழுதும் வேகத்தை கண்டு, எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று அழைத்தார் எம்ஜிஆர். பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான நாகிரெட்டியின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயாபஜார் போன்ற படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதினார் தஞ்சை ராமையாதாஸ்.

டைரக்டர் ஸ்ரீதர் அமரதீபம் படத்துக்கு பாடல் எழுதும்படி கேட்க ஜாலியாக எழுதிய பாட்டுதான் ஜாலிலோ ஜிம்கானா என்ற டப்பாங்குத்து பாடல். காதல் முத்திரை பதிக்க மணாளனே மங்கையின் பாக்கியம் படப் பாடலான அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா என்ற பாடலும் எழுதுவார். கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே என்ற பாடலையும் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கிறார் தஞ்சை ராமையாதாஸ். 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பல பாடல்கள் இன்றைய தலைமுறையை கவர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை அப்படி ஒரு பாடல்தான் கண்ணாலே பேசி பேசி கொல்லாதே என்ற பாடல்.

பள்ளிப்படிப்பு வாசம் அறியாத நாகு என்ற இளைஞரை தன்னுடன் சேர்த்து, தமிழ் கற்பித்து தனது நாடகங்களில் வில்லனாக நடிக்க வைத்தவர் தஞ்சை ராமையா தாஸ். அந்த நாகுதான் பின்னர் பரமசிவம் நாகராஜன் என அழைக்கப்பட்ட ஏபி நாகராஜன் ஆக மாறி திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் ஏபி நாகராஜன்.

அதேபோல் திருவாரூரிலிருந்து தன்னிடம் வந்து சேர்ந்த இயேசுதாஸ் என்ற இளைஞருக்கு கதை வசன தொழில் நுட்பத்தை கற்று தந்து பல படங்களுக்கு எழுத, கற்றுக் கொடுத்தார் அந்த இயேசுதாஸ் தான் பின்னர் சிறந்த கதாசிரியராக மாறி ஆயிரம் படங்களுக்கு மேல் உரையாடல் எழுதிய ஆரூர்தாஸ்.

பதிவு:எஸ்ஜிஎஸ் கம்பளை