2 ஆண்டுக்கு பின் தஞ்சாவூர் பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (13ம் தேதி) கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி சித்திரை திருவிழாவிற்காக கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, கோவிலில் காலை,மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று(13ம் தேதி) காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடந்தது. இதையடுத்து அதிகாலை 5:45 மணிக்கு பெரியகோவிலில் இருந்த ஸ்ரீதியாகராஜர், கமலாம்பாள், ஸ்கந்தர் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளும் புறப்படாகி, ஒன்றன் பின் ஒன்றாக மேலவீதியில் உள்ள தேர் மண்டப பகுதியை அடைந்தது. இதையடுத்து 3 அடுக்குகள் கொண்ட 16.5 அடி உயரம் தேர் முழுவதும், 30 அடி உயரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டும், 231 மர சிற்ப பொம்மைகளும் வர்ணம் பூசப்பட்டு ஜொலித்தன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.