நாளை காலை மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்; அலைபேசி கொண்டு வர தடை!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்.14) காலை 10:30 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் நடக்கிறது. காலை 7:00 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அலைபேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாணத்தை காண தெற்கு கோபுரம் வழியாக பக்தர்களுக்கு இலவச அனுமதி உண்டு. முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், அரசு அதிகாரிகள், ரூ.500, ரூ.200 கட்டண சீட்டு பெற்றுள்ளவர்கள் வடக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். எந்தவொரு பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை.
மேற்கு, வடக்கு ஆடி வீதிகளில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வேண்டும். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் வடக்கு, மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும். போலீஸ் சார்பில் முககவசம், குடிநீர் வழங்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.