ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா தோல்வி!!

9-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென்ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்கொண்டது. 
தனது முதல் 4 ஆட்டங்களில் எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காத நெதர்லாந்து வீராங்கனைகள் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். அந்த அணி வீராங்கனைகள் டீசா பீட்ஸ்மா 12-வது நிமிடத்திலும், லுனா போக்கே 53-வது நிமிடத்திலும், ஜிப் டிக்கே 54-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். 
இந்திய வீராங்கனைகளால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. மும்தாஸ் கான் அடித்த அருமையான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவிப்போனது.
முடிவில் நெதர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்து தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. அதே சமயம் இந்த போட்டியில் இதுவரை இறுதிசுற்றை எட்டியதில்லை என்ற இந்தியாவின் சோகம் தொடருகிறது. மற்றொரு அரைஇறுதியில் ஜெர்மனி 8-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பந்தாடியது.
நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து- ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் சந்திக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.