இந்தியா மீண்டு வருகிறது; பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை – ‘நிதி ஆயோக்’ துணை தலைவர் பேட்டி!!

‘நிதி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் குமார் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொருளாதார மீட்சியின் சிகரத்தில் இந்தியா இருக்கிறது. ரஷியா-உக்ரைன் போரால் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டு இருப்பது உண்மைதான். உலக அளவில் பொருட்கள் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அதையும் மீறி, உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 

கடந்த 7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் இனிவரும் ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்க விகிதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை தாண்டி உயர்ந்திருப்பது உண்மைதான். பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்.
நடப்பு நிதி ஆண்டில் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே. பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை. அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து பொருட்களின் விலையையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. 
தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். கடந்த காலத்தில், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இந்த தடவை மாநில அரசுகள், வரியை குறைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.