ரூ.348.23 கோடி வருவாய் ஈட்டியது மாநகராட்சி: ரூ.45 கோடி கூடுதல் வசூலித்து சாதனை!!

கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு, வாடகை மற்றும் குத்தகை, ஏல இனங்கள் வாயிலாக வருவாய் ஈட்டப்படுகின்றன. மொத்தம், 9 லட்சத்து, 63 ஆயிரத்து, 887 கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.

இதன் மூலமாக ஈட்டப்படும் வருவாய் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவது மற்றும் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன.2021-22 நிதியாண்டில், சொத்து வரியாக ரூ.206.33 கோடி வசூலிக்க வேண்டும். முந்தைய ஆண்டு (2020-21) கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், வரியினங்கள் வசூலிக்க, அழுத்தம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

சட்டசபை தேர்தலும் நடந்ததால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, நோட்டீஸ் வினியோகம், ஜப்தி நடவடிக்கை உள்ளிட்டவை எடுக்க முடியவில்லை. இதனால் அவ்வாண்டில், ரூ.158.21 கோடி நிலுவை விழுந்தது. இச்சுமையையும் சேர்த்து, மொத்தமாக, ரூ.364.54 கோடி வசூலிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

வழக்கமாக, ஜன., 14க்கு பிறகே வரியினங்கள் வசூல் தீவிரப்படுத்தப்படும். இம்முறை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதால், வீதி வீதியாகச் சென்று வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வரி வசூலர்களும், வருவாய் பிரிவினரும் தேர்தல் பணிக்குச் சென்றதால், வரி வசூல் தொய்வடைந்தது.
தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும் வருவாய் ஈட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கூடுதலாக வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டனர். வரி விதிப்புதாரர்களின் மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டது. நினைவூட்டும் வகையில் தொலைபேசியில் அழைத்து பேசப்பட்டது. நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்தவர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இறுதியாக, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அரசு விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், வரி வசூல் மையங்கள் செயல்பட்டன. மொபைல் டீம்கள் உருவாக்கி, வார்டு வாரியாகச் சென்று முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.