ஏப்.,14ல் மீனாட்சி திருக்கல்யாணம்: ஆன்லைன் கட்டணம் செலுத்தி நேரில் தரிசிக்கலாம்!!!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்., 14ல் நடைபெற உள்ளது. இதை காண, பக்தர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக கட்டணம் செலுத்தி, நேரில் தரிசிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச அனுமதியும் உண்டு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்., 5ல் துவங்கி, 16 வரை நடக்கிறது. விழா வின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்., 14, தமிழ் புத்தாண்டு தினத்தன்று நடைபெற உள்ளது. திருக்கல்யாண உற்சவத்தை காண பக்தர்களுக்கு 200, 500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 200 ரூபாய் கட்டணத்தில், அதிகபட்சம் 3 பேருக்கும், 500 கட்டணத்தில் அதிகபட்சம் 2 பேரும் அனுமதிக்கப்படுவர்.

மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டண சீட்டு பெற வேண்டும். குறிப்பாக, 500 ரூபாய் கட்டண சீட்டு 2,500 பேருக்கும், 200 ரூபாய் கட்டண சீட்டு 3,200 பேருக்கும் மட்டுமே வழங்கப்பட உள்ளன. ஒரே நபர் இரண்டு கட்டண சீட்டிற்கு விண் ணப்பிக்க முடியாது. கோவில் இணைய தளத்தில் www.maduraimeenakshi.org ஏப்., 4 முதல் ஏப்.,7 வரை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை பதிவேற்றப்பட வேண்டும். மொபைல் போன் எண், இ – மெயில் முகவரி கட்டாயம் தேவை. பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தில், மார்பளவு போட்டோ இணைக்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு மொபைல் போன் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.