300 கோவில்களில் அறங்காவலர் குழு: அமைச்சர் சேகர்பாபு தகவல்!!

திருத்தணி : ”தமிழகத்தில், 300 கோவில்களில், இந்தாண்டு இறுதிக்குள் அறங்காவலர் குழு நியமிக்கப்படும்,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஒன்பது நிலை கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதி இணைக்கும், 56 படிகள், 92 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.இதில், ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

பரிந்துரைபின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: ஏழு ஆண்டுகளுக்கு முன், திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு செல்லும் மண்டபம் மழையால் இடிந்தது. அந்த மண்டபம், 5 லட்சம் ரூபாய் செலவில் கட்ட, இன்று அடிக்கல் நடப்பட்டது.அதே போல், 2017ல், ராஜகோபுரம் பணிகள் முழுதும் முடிந்தும், 56 இணைப்பு படிகள் அமைக்காமல், கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டன.அந்த இணைப்பு படிகள், 92 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தேன்.

இப்பணிகள், ஆறு மாதத்திற்குள் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். மேலும், மலைக்கோவிலுக்கு மாற்றுப் பாதை அமைப்பதற்கு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மலைப்படிகள் வழியே, மூன்று குளங்கள் சீரமைக்கப்படும். எட்டு ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், இரு மாதத்திற்கு முன் சீரமைத்து, பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதேபோல், 11 ஆண்டுகளாக பழுதாகி கிடப்பில் இருந்த வெள்ளித்தேர், 18.30 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வெள்ளித் தேரும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.