14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்: மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முதல் – அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எனது 3-வது டெல்லி பயணம் இது. இந்த பயணத்தின்போது பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அவர் உடனடியாக நேரம் ஒதுக்கித் தந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினேன்.

அதிலுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்து உரைத்தேன். அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட பிரதமர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவர் அளித்த உறுதிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஊடகம் வாயிலாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமருடனான இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மன நிறைவாகவும் அமைந்தது.

நான் அவரிடம் அளித்த கோரிக்கைகளில் சில முக்கியமான கோரிக்கைகளை சொல்ல விரும்புகிறேன். இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையை நீங்கள் அறிவீர்கள். அங்கிருந்து வரும் தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களுக்கு அரசியல் மற்றும் பொது உரிமைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மீனவர் பிரச்சினைகள் பற்றியும் பேசினேன். மீன் பிடி உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டேன். கச்சத்தீவு கோரிக்கையையும் முன்வைத்தேன்.

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். நீட் விலக்கு தொடர்பாக சட்டசபையில் 2-வது முறை மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வில்லை. எனவே நீட் விலக்குக்கு அனுமதி பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன்.

இதுபோல உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது, தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு கேட்டேன். காவல் மற்றும் தீயணைப்புத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு தரவேண்டும் என்றும் கேட்டேன்.

அதைப்போல ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத்தில் புதிய விமான நிலையத்துக்கு பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள நிலத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்றும், டி.ஆர்.டி.ஓ. ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்றும், சேலம் உருக்காலையில் உள்ள மிகை நிலத்தை பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்துக்கு தரவேண்டும் என்றும், கோவையில் ஏவியேஷன் மையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரியிடமும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக ஆக்க வேண்டும் என்றும், மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

இந்த சந்திப்புகள் மனநிறைவை அளித்தன. இந்த உரையாடலின் போது மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழகத்தில்தான் நெடுஞ்சாலை திட்டங்கள் அதிக அளவு செயல்படுத்தப்படுவதாக கூறினார். அதேபோல ராஜ்நாத் சிங், பாதுகாப்பு வழித்தடத்துக்கு தமிழகம் தான் உகந்த மாநிலம் என்று சொன்னார்.

இந்த கோரிக்கைகள் பற்றி எங்கள் எம்.பி.க்கள் ஏற்கனவே பேசி இருக்கிறார்கள். தொடர்ந்து அதை வலியுறுத்துவார்கள் என்று தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை (அதாவது இன்று) நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோரையும் சந்தித்து தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறேன்.

அதைப்போல டெல்லியில் உள்ள மாதிரி பள்ளியையும், மருத்துவமனையையும் பார்வையிட உள்ளேன். அப்போது டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் என்னுடன் வர இருப்பதாக கூறியிருக்கிறார்.

நாளை(சனிக்கிழமை) மாலை அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்க இருக்கிறேன். பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இலங்கை தமிழர்கள் விஷயத்தில் எது நியாயமானதோ அதை செய்வதாக பிரதமர் கூறி இருக்கிறார்.

டெல்லியில் உள்ள தமிழ் பள்ளிகளில் தமிழக அரசு அளித்த நிதியில் முறைகேடுகள் நடந்திருந்தால் அது பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும். நாளை மாதிரி பள்ளியை பார்க்கும்போது அதுபற்றி கேட்கிறேன். கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை சட்டரீதியாக ஆலோசித்து வருகிறோம். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

பிரதமருக்கு பலமுறை நன்றி சொன்னது எதற்கு என்றால் அவர் தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு உறுதி தந்ததற்காக நன்றி தெரிவித்திருக்கிறேன். செய்து முடித்ததற்காக அல்ல.

இலங்கை தமிழர் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். அகதிகள் என்று அழைக்கப்பட்ட அவர்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிக வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் எல்லா கட்சி எம்.பி.க்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்வதாக என்னை பாராட்டினார்கள்.

நான் எப்போது டெல்லி வந்தாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்காமல் சென்றது கிடையாது. அதுபோல நாடாளுமன்றத்தில் நான் இருக்கும் போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல, கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு அவரும், ராகுல் காந்தியும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இவ்வாறு நிருபர்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அரசு இல்லத்தில் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.