யானைகளின் மரணத்துக்கு இதுவும் காரணம்!!!

கோவை: கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, சிறுமுகை வனச்சரகத்தில் தீவன பற்றாக்குறையால் யானைகள் அவதிப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், யானைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இச்சரகத்தை நோக்கி படையெடுக்கும்.பவானிசாகர் அணையில் உள்ள தண்ணீருக்காக பெத்திக் குட்டையில் அதிகளவில் கூடும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இச்சரகத்தில் அதிக யானைகள் இறப்பு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக யானை ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் ஒரு யானை இறந்தது. இது குறித்து, சிறுமுகை வனச்சரகர் செந்தில் கூறியதாவது:பெத்திக்குட்டையில் கோடை வறட்சி காரணமாக, பசுந்தீவனம் குறைந்துள்ளது. இத்தகைய பற்றாக் குறை காலங்களில், யானைகள் சீமை கருவேல மரங்களின் காய்கள் மற்றும் கிளைகளை உண்ணும். இந்த மரத்தில், ‘டெனிங்’ எனப்படும் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனாலும் யானைகளுக்கு, செரிமான கோளாறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

சத்து குறைபாடு, உணவு பற்றாக்குறை, நாள்பட்ட குடல் புழு பிரச்னை உட்பட பல்வேறு உடல் உபாதைகளுடன் இங்கு யானைகள் வருகின்றன. ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட பயிர்களை உண்பதால், கல்லீரல் பாதிக்கப்படும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பவானி ஆற்றில் கலக்கிறது. இதைக் குடிக்கும் யானைகளின் உடல் நலம் மேலும் பாதிக்கப்படுகிறது. இப்படி, யானைகளின் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.