மும்பையில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் இல்லை; மாநகராட்சி அறிவிப்பு!!
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பரவலை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதன்படி, பொது இடங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இவற்றை கடுமையாக கடைப்பிடிக்கவும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவும் தொடர்ந்தது.
எனினும், சமீப காலங்களாக நாட்டில் கொரோனா பாதிப்புகள் பெருமளவு குறைந்து உள்ளன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது
மராட்டிய மாநிலத்தில் வரும் ஏப்ரல் 2ந்தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறினார். மராட்டியத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் சட்டம் அமலில் இருந்ததாகவும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவை ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் பயணங்களுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முக கவசம் அணிதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மக்கள் கவனக்குறைவாக செயல்பட வேண்டாமென்றும் முக கவசம் அணிவதை விருப்பத்தின் பேரில் தொடர வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
இந்த நிலையில், மும்பையில் முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீசார் அபராதம் எதுவும் விதிக்க போவதில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. எனினும் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அவர்களாகவே முன்வந்து முக கவசங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.