தரமற்ற உணவு விற்பனை அமோகம்: ரூ.1.15 கோடி அபராதம்!
கோவை: மாவட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து, ரூ.1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெளியிடங்களில் உணவு உட்கொள்ளும் பொதுமக்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:
மாவட்டத்தில் செயல்படும் உணவு சார்ந்த வணிக நிறுவனங்கள் அனைத்தும் உணவு பாதுகாப்பு தரம் சட்டத்தின் கீழ், உரிமம் அல்லது பதிவு செய்திருக்க வேண்டும். அவற்றை உரிய நேரத்தில் புதுப்பித்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில், 35 கோவில் அன்னதானக் கூடங்களுக்கு பி.எச்.ஓ.ஜி., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. 1,406 அங்கன்வாடி ஊழியர்கள், உணவு மைய ஒருங்கிணைப்பாளர்கள், 540 பேருக்கு பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 23 அங்கன்வாடி மையங்களுக்கு ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழ் வழங்கப்பட்டது. தினசரி சமைக்கப்படும் உணவுகளின், 250 கிராம் மாதிரி எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.