சமையல் எண்ணெய் இருப்பு வைக்க கட்டுப்பாடு நீட்டிப்பு..!!

சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பதுக்கலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நிர்ணயித்தது. கடந்த அக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், சமையல் எண்ணெய் இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று புதிய உத்தரவை வெளியிட்டது.
அதன்படி, சில்லரை வியாபாரிகள் 30 குவிண்டால் வரையும், மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் வரையும், ஏராளமான கிளைகளை கொண்ட பெரு நிறுவனங்களின் சில்லரை கடைகள் 30 குவிண்டால் வரையும், அவற்றின் டெப்போக்கள் 1,000 குவிண்டால் வரையும் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் 90 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
இதுபோல், எண்ணெய் வித்துகளை சில்லரை வியாபாரிகள் 100 குவிண்டால் வரையும், மொத்த வியாபாரிகள் 2 ஆயிரம் குவிண்டால் வரையும், உற்பத்தி நிறுவனங்கள் 90 நாட்கள் வரையும் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
சமையல் எண்ணெய் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய சூழ்நிலையை கருதி, இம் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.