மத போதகருக்கு எதிராக கிறிஸ்தவர்கள் முற்றுகை!!
திருப்பூர் : திருப்பூர், ராமையா காலனி, ஏ.ஜி., சர்ச் போதகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுபான்மையினர் ஆணைய தலைவரை, கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் குறித்தும், தேவைகள் குறித்தும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் கலந்தாய்வு நடத்தியது. அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தனர். திருப்பூர், ராமையா காலனி, ஏ.ஜி., சர்ச் போதகர் பரமானந்தம் மீது புகார் இருப்பதால், அவரை மாற்ற வேண்டுமென, சர்ச் உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். ‘கடந்த இரு வாரமாக, சர்ச் பூட்டி வைக்கப்பட்டுள்ளது; இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
போதகர் பரமானந்தத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பதாகைகளை ஏந்தியபடி, சிறுபான்மையின ஆணையரை, கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து கேட்டறிந்த, அமைச்சர், ஆணைய தலைவர் ஆகியோர், ‘ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வருவதால், விசாரணை முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, மனுவை பெற்றுக்கொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.